இந்தியா

15வது உச்சி மாநாடு.. பிரதமர் மோடி ஜப்பான் பயணம்!

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.

15வது உச்சி மாநாடு.. பிரதமர் மோடி ஜப்பான் பயணம்!
PM Modi in Japan
பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் சீனாவுக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

ஜப்பானில் இருதரப்பு பேச்சுவார்த்தை

பிரதமர் மோடியின் இந்தப் பயணம், ஜப்பான் பிரதமரின் அழைப்பின் பேரில் நடைபெறுகிறது. பிரதமராக மோடி ஜப்பானுக்கு மேற்கொள்ளும் எட்டாவது பயணம் இதுவாகும். அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அடங்கிய ‘குவாட்’ அமைப்பின் எதிர்காலம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிப்பதாகும். மேலும், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உடனான முதல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

இந்த 15-வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டின்போது, இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். குறிப்பாக, மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தைத் தாண்டி, இந்தியாவின் எதிர்கால புல்லட் ரயில் திட்டங்களில் ஜப்பானின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

சீனாவில் சர்வதேச மாநாடு

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி வரும் 31-ஆம் தேதி சீனாவுக்குப் பயணிக்க உள்ளார். அங்கு நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டின்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திக்க இருக்கிறார். அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.