இந்தியா

வரதட்சணை கொடுமை: ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை!

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை அவரது கணவர் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை: ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை!
Young woman murdered by being forced to drink acid
உத்தரப்பிரதேச மாநிலம் அமரோஹா மாவட்டத்தில், வரதட்சணை கேட்டு 23 வயது இளம்பெண் ஒருவரை அவரது கணவர் குடும்பத்தினர் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

அமரோஹா மாவட்டத்தின் டிலௌலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலாகேடா கிராமத்தைச் சேர்ந்தவர் குல்ஃபிசா. இவர், ஒரு வருடத்திற்கு முன்பு பர்வேஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். குல்ஃபிசாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் குடும்பத்தினர் ரூ. 10 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஒரு கார் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 11 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குல்ஃபிசாவை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 17 நாட்களாகப் போராடி நேற்று (ஆகஸ்ட் 28) உயிரிழந்தார்.

காவல்துறை நடவடிக்கை

குல்ஃபிசாவின் தந்தை ஃபர்கான் அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் பர்வேஸ் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய காவல் கண்காணிப்பாளர் சக்தி சிங், "பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், வரதட்சணை மரணம் தொடர்பான பிரிவுகள் சேர்க்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில், வரதட்சணை கொடுமையால் 26 வயது இளம்பெண் ஒருவர் எரிக்கப்பட்ட சம்பவம் நடந்த நிலையில், தற்போது மற்றொரு இளம்பெண் வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.