இந்தியா

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. பின்வாங்கியது டெல்லி அரசு

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை தற்போது அமல்படுத்த சாத்தியமில்லை என டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. பின்வாங்கியது டெல்லி அரசு
Delhi Government Halts Fuel Ban on Old Vehicles Amidst Public Outcry and Tech Issues
இந்தியாவில் காற்று மாசு அதிகமுள்ள இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தலைநகர் டெல்லி தான். காற்று மாசடைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் வாகனங்களின் பங்கு என்பது மிகவும் பெரியது. இந்நிலையில் தான் பழமையான வாகனங்கள் டெல்லியில் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் 10 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட டீசல் வாக​னங்​கள், 15 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட பெட்​ரோல் வாக​னங்​களுக்கு எரிபொருள் வழங்​கப்​படுவது நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த உத்தரவினை தற்போது நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என டெல்லி அரசு காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் உத்தரவினை அமல்படுத்துவதற்காக, தலைநகர் டெல்லியில் உள்ள 498 எரிபொருள் நிலையங்களில் ஆட்டோமெட்டிக் நம்பர்பிளேட் அடையாள கேமிரக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமிரா என்ன செய்யுமென்றால், வாகனத்தின் பதிவு எண்ணை தனது டேட்டாவுடன் சரிபார்த்து பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு எச்சரிக்கை செய்யும். பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸார் வாகனம் குறித்த ஆவணங்களை சரிப்பார்த்து வாகனத்தை பறிமுதல் செய்தும், நோட்டீஸ் அனுப்பியும் வந்தனர்.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் எத்தனை?

இந்த உத்தரவு அமல்படுத்த கடந்த ஜூலை 1 ஆம் தேதி மட்டும், 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 98 வாகனங்களின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இரண்டாவது நாளான ஜூலை 2 ஆம் தேதி, 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 78 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மூன்றாவது நாளான நேற்றையத் தினம் எந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதே பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதனையும் தொடர்ந்து உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு பகுதியில் வாகனங்களை பரிசோதனை செய்வதில் சர்ச்சைகளும், தொழில்நுட்ப சிக்கல்களும் எழுந்தன. தற்போது இந்த திட்டத்தை கைவிட முடிவெடுத்துள்ளது டெல்லி அரசு.



அமைச்சரின் விளக்கம்:

இதுத்தொடர்பாக டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், “பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை உடனடியாக அமல்படுத்துவது சாத்தியமில்லை. இது எதிர்மறையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடும். ஒரு வாகனத்தின் வயதை அடிப்படையாகக் கொண்டு தடையை அமல்படுத்துவதற்குப் பதிலாக, வாகன உமிழ்வை அடிப்படையாகக் கொள்வதே காற்று மாசுப்பாட்டினை குறைப்பதற்கான சிறந்த வழி” என குறிப்பிட்டார்.

மேலும், “பெட்ரோல் பங்குகளில் பொருத்தப்பட்டுள்ள ANPR (Automatic Number Plate Recognition) சில இடங்களில் சரியாக வேலை செய்யவில்லை. தொழில்நுட்ப பிரச்சினைகளும் உத்தரவினை முழுமையாக அமல்படுத்துவதற்கு தடையாக உள்ளது” என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தாவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ”பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. காற்று மாசுப்பாட்டை கட்டுபடுத்த எங்களது அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் பொதுமக்களை பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்படும்” எனவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.