இந்தியா

உதவிக்கு யாரும் வராததால் விரக்தி..உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச்சென்ற கணவர்

நாக்பூரில் உதவி கேட்டு யாரும் வராத விரக்தியில் இறந்த மனைவியின் உடலை கணவர் பைக்கில் கொண்டு சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதவிக்கு யாரும் வராததால் விரக்தி..உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச்சென்ற கணவர்
நாக்பூரில் விபத்தில் உயிரிழந்த மனைவியின் உடலை கணவர் பைக்கில் எடுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் சாலையில் வேகமாக வந்த லாரி மோதியதில் 35 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பைக்கில் மனைவி உடலை எடுத்துச்சென்ற கணவர்

விபத்து நடந்தவுடன் பெண்ணின் கணவர் உதவிக்காக அந்த வழியாக சென்ற பலரிடம் உதவிக்கோரி உள்ளார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அந்த நபர் தனது மனைவியின் உடலை தனது பைக்கில் பின்னால் கட்டி வைத்து நெடுஞ்சாலையில் பயணிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.



இது அந்த வழியாக வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் இந்த சம்பவத்தை பார்த்து வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்தான விசாரணையில் நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமித் யாதவ் என்ற நபர் தனது மனைவியின் உடலை சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ரக்ஷா பந்தன் அன்று நடந்ததாகவும், அந்த தம்பதியினர் நாக்பூரின் லோனாராவிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் கரன்பூருக்குப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

வீடியோ வெளியாகி அதிர்ச்சி

மோர்படா அருகே வேகமாக வந்த ஒரு லாரி அவர்கள் மீது மோதியதில், கியார்சி என்ற பெண் பலத்த படுகாயம் அடைந்து உயிரிழந்ததாகவும், நிற்காமல் லாரி ஓட்டுநர் தப்பிச்சென்றதும் தெரியவந்துள்ளது.

உதவி ஏதும் கிடைக்காததால் கணவர் அமித் தனது மனைவியின் உடலை மத்தியப் பிரதேசத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்கு பைக்கில் எடுத்துச்செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் அந்த வீடியோவில் ஒரு போலீஸ் வேன் அவரைப் பின்தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்தியது.

போலீசார் விசாரணை

பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணின் உடலை நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தம்பதி நாக்பூரின் லோனாராவில் வசித்து வந்ததும், மத்தியப் பிரதேசத்தின் சியோனியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.