இந்தியா

வாக்காளர் பட்டியலில் அண்டை நாட்டினர்.. பீகார் அரசியலில் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் அண்டை நாட்டினர்.. பீகார் அரசியலில் பரபரப்பு
Foreign Nationals in Bihar Voter List Spark Political Storm
243 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் இந்தாண்டு நவம்பர் மாதம், சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைப்பெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ”Special Intensive Revision (SIR)” என்கிற பெயரில் வீடு வீடாக சென்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: எதிர்கட்சிகள் எதிர்ப்பு

ஜூன் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் நோக்கம், தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்குவதும் தான் என தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்படுகிறது. கடைசியாக 2003 ஆம் ஆண்டும் இதேப்போன்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பீகாரில் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம், பீகாரில் மக்கள் தொகை 8 கோடிக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையிலும் இந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்த நேரத்தில் முடிக்கப்படாது என கூறுகின்றனர். மேலும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஏதேனும் காரணங்களை கூறி வாக்காளர்களை வேண்டுமென்றே நீக்குவதே நோக்கமாகக் கொண்ட ஒரு சதி என்று ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. போலி வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் கூறுகிறார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த மஹாராஷ்ரா சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் அதிகளவில் வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தார்கள். அந்த தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியினை சந்தித்து இருந்தது என ராகுல் காந்தி வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். இதை சதிட்திட்டம் தான் பீகாரிலும் மேற்கொள்ளப்படுகிறது என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

உண்மையான வாக்காளர்கள் சரிபார்க்கப்பட்டு போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டால் எதிர்க்கட்சி ஏன் வருத்தப்படுகிறது என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்:

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் (Special Intensive Revision - SIR) பணியானது பீகாரில் வீடு வீடாகச் சென்று தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல தனிநபர்கள் பீகாரில் வசித்து வருவதும், இந்திய ஆவணங்களான ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் அட்டைகளை அவர்கள் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நபர்களை வட்டார அளவிலான அதிகாரிகள் (Block Level Officers) அடையாளம் கண்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் குறித்து ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம் பீகார் அரசியலில் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், அண்டை நாட்டை சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவது பீகார் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.