இந்தியா

உ.பி. பள்ளியில் பயங்கரம்: 12-ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக் கொன்ற சக மாணவர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. பள்ளியில் பயங்கரம்: 12-ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக் கொன்ற சக மாணவர்கள்!
Class 12 student stabbed to death by fellow students
உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், இரண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 12-ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர கொலை

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மாணவர்கள், நேற்று காலை 17 வயதுடைய அந்த மாணவனை பள்ளி மாடிக்கு அழைத்துச் சென்று, கத்தியால் பலமுறை குத்தியதோடு, அவனது கழுத்தையும் அறுத்துள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் வருவதற்குள், இரண்டு மாணவர்களும் மாடியில் இருந்து குதித்து அருகில் உள்ள வயல்வெளிகள் வழியாகத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, அந்த மாணவனை உள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரணை

சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மாணவன் பழைய பகை காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய மாணவர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தக் கொலை தொடர்பாக, கர்வா கலா கிராமத்தைச் சேர்ந்த விஜய் குமார் பாண்டே, ராமேஸ்வர் பிரசாத் திவாரி, டிம்பி பாண்டே மற்றும் பராவ் கிராமத்தைச் சேர்ந்த பப்பு மிஸ்ரா ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.