இந்தியா

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு அதிகரிப்பு.. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் மட்டும் 41 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு அதிகரிப்பு.. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
Increase in brain-eating amoeba cases in Kerala
கேரளாவில் மூளை உண்ணும் அமீபா (Amoebic Meningoencephalitis) நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், முதலமைச்சர் பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 18 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 41 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘ஜலமான் ஜீவன்’ திட்டம்

இந்த நோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கேரள அரசு ‘ஜலமான் ஜீவன்’ (Jalaman Jeevan) என்ற பெயரில் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டம், சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை மற்றும் ஹரிதா கேரளம் மிஷன் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.

ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில், கேரளா முழுவதும் உள்ள கிணறுகளுக்கு குளோரின் பவுடர் கலக்கப்படும். மேலும், வீடுகள் மற்றும் பொது இடங்களிலுள்ள தண்ணீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட செய்யப்படவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது..

தடுப்பு நடவடிக்கைகள்

இந்த நடவடிக்கைகள் அமீபா மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நீர் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிகளும் இத்திட்டத்தில் முக்கியப் பங்காற்ற உள்ளன. உள்ளூர் நீர்நிலைகளை சுத்தம் செய்வது மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளன.

இந்த அமீபாக்கள் கிணறுகள், சுத்தமில்லாத தண்ணீர் தொட்டிகள், அசுத்தமான குளங்கள் மற்றும் ஆறுகளில் காணப்படுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை மிகவும் அவசியம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

'குப்பையில்லா புதிய கேரளா'

இந்தத் திட்டம், கேரளாவை நாட்டிலேயே மிகவும் தூய்மையான மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட, 'குப்பையில்லா புதிய கேரளா' என்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.