இந்தியா

இண்டிகோ விமானச் சேவை 5% குறைக்க உத்தரவு: டிஜிசிஏ-வின் புதிய கட்டுப்பாடு!

இண்டிகோ விமான சேவையை 5% குறைக்க மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இண்டிகோ விமானச் சேவை 5% குறைக்க உத்தரவு: டிஜிசிஏ-வின் புதிய கட்டுப்பாடு!
IndiGo flight service ordered to reduce by 5%
விமானப் பணி ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள் காரணமாக இண்டிகோ (IndiGo) விமானச் சேவை தொடர்ந்து 8-வது நாளாகப் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையில் 5% சேவைகளைக் குறைக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தொடரும் பாதிப்பும் டிஜிசிஏ-வின் உத்தரவும்

இண்டிகோ விமானச் சேவை தொடர்ந்து 8-வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், விமான சேவையில் மக்களின் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், தற்போது இயக்கப்படும் விமானங்களில் 5% விமானங்களைக் குறைக்க இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. அதாவது, தற்போதைய விமானச் சேவை அட்டவணையின்படி இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்க முடியவில்லை என்பதால் இந்தச் சேவையைக் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது இண்டிகோவில் 2,300 விமானங்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதில் 115 விமானங்கள் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு விமான சேவைகளைக் குறைக்க வேண்டும் என்றும், திருத்தப்பட்ட விமான சேவைகளின் பட்டியலை நாளை (டிச.10) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நிறுவனத்திற்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. வரும் நாள்களில் மேலும் 5% விமானங்கள் சேவை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் சர்ச்சை

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இண்டிகோ விமானப் பிரச்னை குறித்து மக்களவையில் பேசினார். நாட்டில் விமானச் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், இண்டிகோ நிறுவனத்திற்குப் போதிய அறிவுறுத்தல்களையும் கட்டுப்பாடுகளையும் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், அக்டோபரில் 15,014 வாராந்திர விமான சேவைகளுக்கு ஒப்புதல் அளித்த போதிலும் விமான நிறுவனம் அவ்வளவு விமானங்களை இயக்க முடியவில்லை என்றும் டிஜிசிஏ கூறியுள்ளது.

மேலும், கடந்த அக்டோபரில் ஏர் இந்தியா, ஏஐ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களுக்குச் சேவைகளைக் குறைத்துவிட்டு, இண்டிகோவுக்கு விமானச் சேவைகளை அதிகரித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், விமான ஊழியர்களின் எண்ணிக்கையைச் சரிபார்க்காமல் ஏன் கூடுதல் விமானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.