இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்.. பீகார் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் பீகாருக்குள் நுழைந்து இருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்.. பீகார் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!
Infiltration of Pakistani terrorists
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் பீகார் மாநிலத்திற்குள் நுழைந்ததாக உளவுத்துறையின் தகவலையடுத்து, மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பான ஜெய்ஸ்-இ-முகமது சேர்ந்த மூன்று பேர் நேபாள எல்லை வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பற்றிய விவரங்கள்

பீகார் காவல்துறை அளித்த தகவலின்படி, சந்தேக நபர்கள் பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டைச் சேர்ந்த அடில் ஹுசைன் மற்றும் பஹவல்பூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், உளவுத்துறை அறிக்கையின்படி, அவர்கள் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் காத்மாண்டுவை அடைந்து, கடந்த வாரம் பீகாரில் நுழைந்ததாகக் தெரிகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சந்தேக நபர்களின் பாஸ்போர்ட் தொடர்பான விவரங்களை எல்லை மாவட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கண்காணிப்பை அதிகரிக்குமாறும், உளவுத்துறை தகவல்களைச் சேகரிக்குமாறும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட உளவுப் பிரிவுகள் எந்தச் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையின் அடிப்படையிலும் தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, மே மாதத்திலேயே இந்திய-நேபாள எல்லை மற்றும் சீமாஞ்சல் மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மதுபானி, சீதாமர்ஹி, சுபால், அராரியா, கிழக்கு மற்றும் மேற்கு சம்பாரன் மாவட்டங்கள் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் நேபாளத்துடன் சுமார் 729 கிலோமீட்டர் நீளமுள்ள திறந்தவெளியான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது ஊடுருவல் மற்றும் எல்லை தாண்டிய இயக்கங்களுக்கு ஒரு முக்கிய இடமாக உள்ளது. மாநிலத்தின் ஏழு மாவட்டங்கள் இந்த எல்லைப்பகுதியில் நேரடியாக அமைந்துள்ளதால், தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.