அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த காட்சிகள் என்னவென்றால், 75 வயதான விவசாயி ஒருவர் தனது வயலை உழுவதற்காக டிராக்டர் மற்றும் எருதுகளுக்குப் பதிலாக தன்னைத்தானே கருவியாக மாற்றிக் கொண்டு நிலத்தை உழுதுக் கொண்டிருந்தார். இந்த காணொளி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுத் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் பலரும் அந்த விவசாயிக்கு உதவ முன்வந்தனர்.
இந்நிலையில், 75 வயதான விவசாயிக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் நிலுவையில் இருந்த ரூ.42,500 கடன் தொகையினை அடைத்துள்ளார் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் பாபாசாகேப் பாட்டீல்.
யார் அந்த விவசாயி?
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரின் அகமதுபூர் தாலுகாவில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார். இவரது மனைவி சாந்தபாய் பவார். விவசாயம் தான் இவர்களின் வாழ்வாதாரத்துக்கான ஒரே ஆதாரம். அப்படியிருக்கையில் இவர்களிடம் நிலத்தை உழுவதற்காக மாடுகளோ? டிராக்டரோ? எதுவுமில்லை. இதனால், கலப்பையினை தன் தோளில் இறுகக்கட்டி கொண்டு அம்பதாஸ் முன்னே செல்ல, அவரது மனைவி சாந்தபாய் கலப்பையின் முனையில் ஏறியவாறு நிலத்தை இருவரும் இணைந்து உழது வருகிறார்கள்.
தங்கள் நிலைமை குறித்து அம்பதாஸ் பவார் கூறுகையில், "விவசாயத்தில் எவ்வளவு பணம் முதலீடு செய்தாலும், அதற்கு ஈடாக இன்னும் குறைவாகவே சம்பாதிக்கிறோம். நாங்கள் வங்கியில் ₹40,000 கடன் வாங்கினோம், அதை நாங்கள் ஒவ்வொரு வருடமும் திருப்பிச் செலுத்தி மீண்டும் கடன் பெற்று வருகிறோம். விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் எவ்வளவு குறைவு என்றால், எங்கள் கழுத்து வரை இருக்கும் சோயாபீன்ஸ் மூட்டைகள் ₹4,000 விலைக்கு விற்கின்றன. ஆனால் 25 கிலோ மட்டுமே எடையுள்ள சோயாபீன் விதைகள் கொண்ட ஒரு பை மட்டும் ₹3,000-க்கு விற்கப்படுகிறது.
விவசாய கூலித்தொழிலாளர்களின் சம்பளமும் வெகுவாக அதிகரித்து விட்டது. விதைப்பதற்கு டிராக்டரை பயன்படுத்துவது எங்களுக்கு கட்டுப்படியாகாது. உழவு மேற்கொள்ள மாடுகளை கூட வாங்க முடியாத சூழலில் தான் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.
பெண் விவசாயி சாந்தபாய் கூறுகையில், ”எங்களுக்கு 2.5 ஏக்கர் அளவிலான பகிரப்பட்ட நிலம் உள்ளது. ஆனால் நீர்ப்பாசன வசதி இல்லை. எங்கள் கைகளையும் கால்களையும் பயன்படுத்த முடிந்த வரை, நாங்கள் வயல்களில் வேலை செய்வோம். எங்களுக்கு வேறு வழியில்லை. அரசாங்கம் எங்கள் கடன்களை தள்ளுபடி செய்து, உரங்கள் மற்றும் விதைகளை இலவசமாக வழங்க வேண்டும்,” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
No Money For Tractor or Bullocks, Elderly Farmer Ties himself To Plough, in place of Oxen.
— Surya Reddy (@jsuryareddy) July 2, 2025
The harsh reality of Ambadas Pawar, a 70-year old #farmer, who has 2.5 acres of land at Hadolti village in #Latur district in #Marathwada region of #Maharashtra, who is forced to tie… pic.twitter.com/IMQxCaOGRy
தேடி வந்த உதவிகள்:
விவசாயி உழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகிய நிலையில், பாலிவுட் நடிகரான சோனு சூட் இந்த தம்பதியினருக்கு கலப்பை வாங்க உதவுவதாக தெரிவித்தார். கிராந்திகாரி ஷேத்காரி சங்கதானாவின் பிரிவு ஒரு ஜோடி காளைகளை வயது முதிர்ந்த விவசாய தம்பதியினருக்கு இலவசமாக வழங்கினார்.
தெலுங்கானாவினை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம், ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை நேரடியாக வழங்கியது. இந்நிலையில் தான் பெண் விவசாயி சாந்தபாய் வைத்த கோரிக்கையினை நிறைவேற்றியுள்ளார் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் பாபாசாகேப் பாட்டீல்.
விவசாயி அம்பதாஸ் பவாருக்கு, ஹடோல்டி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் நிலுவையில் இருந்த ரூ.42,500- கடன் தொகையினை அமைச்சர் பாபாசாகேப் பாட்டீல் அடைத்துள்ளார். இதற்கான சான்றிதழை விவசாயியிடம் வழங்குமாறு கூட்டுறவு சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். ’விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் எங்களது அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும்’ அமைச்சர் தெரிவித்துள்ளார்.