இந்தியா

சட்டசபையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

சட்டசபையில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு பதிலாக விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

சட்டசபையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!
Maharashtra's Manikrao Kokate Shifted from Agriculture to Sports Ministry
மகாராஷ்டிர மாநில அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, சட்டமன்றத்தில் ஆன்லைன் சீட்டாட்டம் விளையாடியது, விவசாயிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தது என தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இதனையடுத்து இன்று அவர் விவசாயத் துறையிலிருந்து விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். புதிய வேளாண் அமைச்சராக தத்தாத்ரேயா பரனே நியமிக்கப்பட்டுள்ளார்.

5 முறை சட்டமன்ற உறுப்பினர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருக்கும் மாணிக்ராவ் கோகடே மூத்த அரசியல்வாதியும் கூட. 67 வயதாகும் மாணிக்ராவ் கோகடே, சின்னார் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை 40,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.எல்.ஏ-வாக தேர்வானார். முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான அமைச்சரவையில், வேளாண் துறை அமைச்சராக மாணிக்ராவ் கோகடே பதவி வகித்து வந்தார்.

ரம்மி விளையாடிய காட்சிகள் வைரல்:

இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மாணிக்ராவ் தனது மொபைல் போனில் ரம்மி விளையாடியது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணிக்ராவ் கோகடே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இதுக்குறித்து அவர் கூறுகையில், “நான் ரம்மி விளையாடவில்லை. எனது மொபைல் போனில் வந்த ஒரு பாப்-ஆப் விளம்பரத்தை மூட மட்டுமே முயற்சித்தேன். என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்யவும் தயார்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் தான், மாணிக்ராவ் கோகடே வகித்து வந்த வேளாண் துறையானது அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேளாண் துறை அமைச்சராக தத்தாத்ரேயா பரனே நியமிக்கப்பட்டுள்ளார். ரம்மி விளையாடிய அமைச்சருக்கு, விளையாட்டுத்துறையினை ஒதுக்கியுள்ள விவகாரத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தும், கிண்டலடித்தும் வருகிறார்கள்.

விவசாயிகள் குறித்த சர்ச்சை பேச்சு:

மாணிக்ராவ் கோகடே சர்ச்சையில் சிக்குவது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக விவசாயிகள் குறித்து அவர் தெரிவித்த கருத்து அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியது. விவசாயிகளுக்கான அரசாங்கத்தின் பயிர் காப்பீடு பற்றி கோகடே பேசும்போது, "இப்போதெல்லாம், பிச்சைக்காரர்கள் கூட ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்க்கு பயிர் காப்பீடு கொடுத்தோம். சிலர் இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தினர்," என்று கூறியிருந்தார்.

இவரது பேச்சு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறி ஒரு விளக்கத்தை அளித்தார். "விவசாயிகளிடமிருந்து ஒரு ரூபாய் கூட அரசாங்கம் வாங்குகிறது. அரசாங்கம்தான் பணத்தை வாங்குகிறது. அப்படியானால் பிச்சைக்காரர் யார்? அரசாங்கம்தான் பிச்சைக்காரர், விவசாயிகள் அல்ல. எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது" என்று கூறியிருந்தார். பாஜக தலைமையிலான கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சூழ்நிலையில் தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடனும், அரசுக்கு ஏற்படும் அவதூறுகளை சமாளிக்கும் வகையில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அதுவே எதிர்கட்சிகள் கிண்டலடிக்க காரணமாக அமைந்துள்ளது.

பிப்ரவரியில், 1995 மற்றும் 1997-க்கு இடையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பெறுவதற்கு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் மாணிக்ராவ் கோகடே மற்றும் அவரது சகோதரர் சுனில் கோகடே ஆகியோருக்கு நாசிக் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.