இந்தியா

புர்கா அணியாததால் ஆத்திரம்: மனைவி மற்றும் 2 மகள்களைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த கணவன்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புர்கா அணியாததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொலை செய்து, அவர்களது உடல்களை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புர்கா அணியாததால் ஆத்திரம்: மனைவி மற்றும் 2 மகள்களைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த கணவன்!
UP Man Kills Wife and Daughters For Not Wearing Burqa
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லியில், புர்கா அணியாததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொலை செய்து, அவர்களது உடல்களை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிலேயே புதைக்கப்பட்ட உடல்கள்

ஃபாரூக் என்பவரின் மனைவி தஹிரா (35), மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் ஷரீன் (14), அஃப்ரீன் (6) ஆகியோர் ஒரு வாரமாக காணவில்லை என கிராமத் தலைவர் போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு ஃபாரூக் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரை பிடித்து விசாரித்தபோது அவரது வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. மனைவி மற்றும் மகள்களின் உடல்களை வீட்டிலேயே புதைத்து வைத்திருப்பதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

புர்கா அணியாததால் ஆத்திரம்

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் என்.பி. சிங் தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து, ஃபாரூக் கூறியபடி வீட்டில் தோண்டப்பட்ட குழியில் இருந்து மூன்று உடல்களையும் மீட்டது. விசாரணையில் தெரியவந்ததாவது, ஃபாரூக்கின் மனைவி தஹிரா ஒரு பண விஷயத்துக்காகக் கணவரிடம் சண்டையிட்டுள்ளார். கோபத்தில் தஹிரா புர்கா அணியாமல் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால், தனது கௌரவம் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த ஃபாரூக், தன் மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து, அவரையும் இரண்டு மகள்களையும் கொலை செய்துள்ளார்.

துப்பாக்கி பறிமுதல்

கொலையில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி (பிஸ்டல்) மற்றும் தோட்டாக்களை ஃபாரூக்கிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஃபாரூக் கைது செய்யப்பட்டு, மீட்கப்பட்ட மூன்று உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குடும்பத் தகராறு தொடர்பான வழக்கு என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில், போலீசார் ஃபாரூக்கிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.