இந்தியா

இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை: தந்தை கைது!

25 வயதான இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவினை, அவரது தந்தை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை: தந்தை கைது!
Tennis Player Radhika Yadav Shot Dead by Father in Gurugram Tragedy
ஹரியானா மாநிலம் குருகிராமில் செக்டார் 57-ல் இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையாக அறியப்படும் ராதிகா யாதவ் தன் குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

இன்று காலை சுமார் 11:30 மணியளவில் ராதிகா யாதவிற்கும், அவரது தந்தைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருக்கட்டத்தில் ராதிகாவின் தந்தை தன்னிடமிருந்த துப்பாக்கியினை கொண்டு ராதிகாவினை நோக்கி 5 முறை சுட்டுள்ளார். இதில் மூன்று தோட்டாக்கள் ராதிகாவின் மீது பாய்ந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ராதிகா.

ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, ராதிகாவின் தந்தையைக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியினையும் மீட்டுள்ளனர்.

சுட்டுக் கொன்றது எதனால்?

என்ன காரணத்திற்காக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது? எதனால் துப்பாக்கியினால் சுட்டார் என உறுதியான தகவல்கள் தற்போது வரை கிடைக்காத நிலையில், ஒரு சில ஊடகங்கள் “ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் உருவாக்குவதில் அதிகம் ஈடுபட்டதாகவும், இது அவரது தந்தைக்குப் பிடிக்கவில்லை என்றும், இதுவே தகராறுக்குக் காரணம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் காவல்துறை தரப்பில், “டென்னிஸ் அகாடமி நடத்துவது தொடர்பாக இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கி கொண்டு தனது மகளை சுட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், துப்பாக்கிச் சுடுதல் தொடர்பான சரியான நோக்கத்தைக் கண்டறிய ராதிகாவின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த ராதிகா யாதவ்?

இந்தியாவில் சானியா மிர்ஷாவிற்கு பிறகு பெரிதாக எந்த டென்னிஸ் வீராங்கனையும் சர்வதேச அளவில் ஜொலிக்கவில்லை. அப்படியிருக்கையில் ராதிகா யாதவ், இந்திய டென்னிஸ் உலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக கருதப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி பிறந்த இவர், கடந்த 2024 நவம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி, சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ITF) பெண்கள் இரட்டையர் தரவரிசையில் 113-வது இடத்தைப் பிடித்து அசத்தியிருந்தார். ஹரியானா மாநில அளவில், பெண்கள் இரட்டையர் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் தொடர்ந்து பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.