இந்தியா

'Saven Thursday Harendra': தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் எழுத்துப் பிழை.. சமூக வலைதளங்களில் கேலி!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் அதிகப்படியான எழுத்துப் பிழைகள் இருந்ததால் அது சமூக ஊடகங்களில் கேலிப்பொருளாகி வைரலாகி வருகிறது.

'Saven Thursday Harendra': தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் எழுத்துப் பிழை.. சமூக வலைதளங்களில் கேலி!
Typo in the check signed by the principal
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலை ஒன்றில், அதிகப்படியான எழுத்துப் பிழைகள் இருந்ததால், அது சமூக ஊடகங்களில் கேலிப்பொருளாகி, வைரலாகி வருகிறது. கடந்த 25 அன்று மதிய உணவு ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட இந்தக் காசோலையை, அதில் இருந்த பிழைகள் காரணமாக வங்கி நிராகரித்துவிட்டது.

பிழைகள் நிறைத்த காசோலை

அட்டர் சிங் என்பவருக்கு ரூ.7,616 ரூபாய்க்கு இந்தக் காசோலை வழங்கப்பட்டுள்ளது. காசோலையை எழுதியவர், தொகையை எழுத்துக்களில் எழுதும்போது பல தவறுகளைச் செய்துள்ளார்.

'Seven' (ஏழு) என்பதற்குப் பதிலாக 'Saven' என்று எழுதியுள்ளார். 'Thousand' (ஆயிரம்) என்பதற்குப் பதிலாக, வாரத்தின் பெயரான 'Thursday' (வியாழக்கிழமை) என்று எழுதியுள்ளார். 'Six' (ஆறு) என்பதைச் சரியாக எழுதியவர், 'Hundred' (நூறு) என்பதற்குப் பதிலாக 'Harendra' என்று எழுதியுள்ளார். கடைசியாக, 'Sixteen' (பதினாறு) என்பதற்குப் பதிலாக 'Sixty' (அறுபது) என்று எழுதியுள்ளார்.

இந்தக் காசோலையைத் தலைமையாசிரியர் தான் எழுதினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கையெழுத்திடும் முன் எழுத்துப் பிழைகளைச் சரிபார்க்கத் தவறியது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் விமர்சனம்

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. 'எக்ஸ்' தளத்தில் ஒரு பயனர், "ஆசிரியர்களின் நிலை இதுதான் என்றால், எப்படி மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்ப விரும்புவார்கள்? அரசுப் பள்ளிகளில் படித்த எங்களைப் போன்றவர்கள் இதைப் பார்த்து மிகவும் வருத்தப்படுகிறோம். எல்லா இடங்களிலும் அமைப்புகள் மாறும்போது, பள்ளிகள் மட்டும் ஏன் தரம் உயராமல் உள்ளது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.