இந்தியா

29 ஸ்பூன்கள், 19 டூத் பிரஷ்களை விழுங்கிய இளைஞர்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்பூன்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

29 ஸ்பூன்கள், 19 டூத் பிரஷ்களை விழுங்கிய இளைஞர்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
Young man swallowed 29 spoons and 19 toothbrushes
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயது இளைஞர் ஒருவர் ஸ்பூன்கள் மற்றும் டூத் பிரஷ்களை விழுங்கியதால் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்து 29 எஃகு ஸ்பூன்கள், 19 டூத் பிரஷ்கள் மற்றும் இரண்டு பேனாக்கள் என 50-க்கும் மேற்பட்ட பொருட்களை மருத்துவர்கள் அகற்றினர்.

ஹாபூர் பகுதியைச் சேர்ந்த சச்சின் என்ற அந்த நோயாளி, போதைக்கு அடிமையானதால் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, மன உளைச்சலுக்கு ஆளான அவர் ஸ்பூன்கள் உள்ளிட்ட பொருட்களை விழுங்கத் தொடங்கியுள்ளார். வயிற்றில் அதிகளவு பொருட்கள் இருந்ததால், அவற்றை எண்டோஸ்கோப்பி மூலம் அகற்ற முடியவில்லை. இதனால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

'சாப்பாடு சரியாகத் தரவில்லை' - இளைஞர் குற்றச்சாட்டு

மறுவாழ்வு மையத்தின் மோசமான நிலைதான் தனது இந்த வினோதப் பழக்கத்திற்குக் காரணம் என சச்சின் குற்றம்சாட்டினார். நோயாளிக்குச் சரியான உணவு வழங்கப்படவில்லை எனவும், வீட்டிலிருந்து வரும் தின்பண்டங்கள் கூடத் தங்களுக்குக் கிடைப்பதில்லை எனவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சச்சின், ஸ்பூன்களை உடைத்துச் சாப்பிட்டுள்ளார். பிறகு டூத் பிரஷ்கள், பேனாக்கள் எனப் பல பொருட்களையும் விழுங்கியுள்ளார். கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், அவருக்குச் செய்யப்பட்ட ஸ்கேனில் வயிற்றில் இருந்த பொருட்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர் நலமாக உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.