அரசியல்

"ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது"- முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்!

ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்துக்கு ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


CM Stalin
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் கணக்குகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளிலும் கூட்டணிக் கதவுகள் இன்னும் முழுமையாக மூடப்படாத நிலையில், திமுக கூட்டணியில் எழுந்துள்ள 'அதிகாரப் பகிர்வு' குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியில் பங்கு கோரிக்கை

திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் சட்டமன்றக் குழு உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் அண்மைக்காலமாக 'ஆட்சியில் அதிகாரம்' என்ற முழக்கத்தை முன்வைத்து வருகின்றனர். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மட்டுமின்றி, அமைச்சரவையிலும் பங்கு வேண்டும் என்ற இவர்களது விருப்பம் திமுக தலைமைக்குச் சற்றே சங்கடத்தை ஏற்படுத்தியது. திமுகவின் முக்கியத் தலைவர்கள் இது சாத்தியமற்றது எனத் தொடக்கத்திலிருந்தே மறுப்பு தெரிவித்து வந்தனர்.

முதல்வரின் அதிரடி விளக்கம்

இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி கருத்தரங்கில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒத்து வராது என்பது திமுகவிற்கும் தெரியும், காங்கிரசுக்கும் தெரியும். இது குறித்துப் பேசப்படுவது எல்லாம் கூட்டணியைப் பிரிக்க இடையில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் சதி" என்று அவர் குறிப்பிட்டார்.

கூட்டணி பலமானது; வெற்றி நிச்சயம்!

எதிர்வரும் தேர்தலை திமுகவும் காங்கிரஸும் இணைந்தே சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறிய முதல்வர், திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையாக இருப்பதாகவும், வரவிருக்கும் தேர்தலில் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு முதல்வரின் பதில் பேரிடியாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.