அரசியல்

மயிலாப்பூர் தவெக வேட்பாளர் மீது மனைவி புகார்: குழந்தையை மீட்டுத் தரக்கோரி முறையீடு!

தவெக மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது, அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மயிலாப்பூர் தவெக வேட்பாளர் மீது மனைவி புகார்: குழந்தையை மீட்டுத் தரக்கோரி முறையீடு!
TVK Candidate
தமிழக வெற்றிக் கழகத்தின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது, அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெங்கட்ரமணனின் மனைவி மீனாட்சி, இன்று தனது தாயாருடன் வந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது கணவர் குழந்தையைப் பார்க்க விடாமல் தடுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

குடும்பப் பிணக்கும் நீதிமன்ற உத்தரவும்

கடந்த 2012-ஆம் ஆண்டு வெங்கட்ரமணனுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், வெங்கட்ரமணன் தன்னுடன் சேர்ந்து வாழாமல், குழந்தையை மட்டும் தன்னிடம் இருந்து பிரித்துச் சென்றுவிட்டதாக மீனாட்சி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கொலை மிரட்டல் மற்றும் போலீஸ் நடவடிக்கை

கணவர் வீட்டிற்குச் சென்று குழந்தையைப் பார்க்க முயன்றபோது, அவர் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் மீனாட்சி தெரிவித்தார். "என் குழந்தையை என்னிடம் இருந்து பிரித்து வைத்துக்கொண்டு, போனில் அழைத்தால் கூட பேசவிடுவதில்லை; தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் வெங்கட்ரமணன் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, எனது மகளை மீட்டுத் தர வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.