விளையாட்டு

ரஹானே எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் மும்பை கிரிக்கெட் ரசிகர்கள்!

மூத்த கிரிக்கெட் வீரரான அஜிங்க்யா ரஹானே, மும்பை ரஞ்சி டிராபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். இருப்பினும் ஒரு வீரராக தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

ரஹானே எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் மும்பை கிரிக்கெட் ரசிகர்கள்!
Ajinkya Rahane Quits as Mumbai Skipper Focuses on Playing Role Ahead of Ranji Season
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களது ஓய்வு முடிவினை அறிவித்து வரும் நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு வரும் அஜிங்க்யா ரஹானே முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அது அவரது ஓய்வு முடிவல்ல. மாறாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் நடைப்பெறும் உள்ளூர் போட்டிகளில் பலம் வாய்ந்த மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார் ரஹானே.

கேப்டனாக ரஹானேவின் செயல்பாடு:

ரஹானே தலைமையில், மும்பை அணி 2023-24 சீசனில் 42-வது ரஞ்சி டிராபி சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும், 2022-23 சீசனில் சையது முஷ்டாக் அலி கோப்பையையும் இவரது தலைமையில் மும்பை வென்றது. ரஹானே இந்திய அணிக்காக 6 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில், 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் MCG மற்றும் Gabba-வில் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளும் அடங்கும்.

இந்நிலையில் தான், ரஞ்சி டிராபி தொடர் தொடங்குவதற்கு முன்பாக மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரஹானே அறிவித்துள்ளார்.

இதுக்குறித்து ரஹானே கூறுகையில், “வரவிருக்கும் புதிய உள்ளூர் ரஞ்சி டிராபி சீசனுக்கு முன்னதாக, இளம் வீரருக்கு கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவை (கேப்டன் பொறுப்பிலிருந்து விலகல்) எடுத்துள்ளேன். இருப்பினும், மும்பை அணிக்காக ஒரு வீரராக தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் என்றும், அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தர முழு அர்ப்பணிப்புடன் இருப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

18 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ரஹானே இதுவரை மொத்தமாக 186 உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 70 போட்டிகளில் மும்பை அணிக்காக கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

புஜாரா இஸ் பேக்?

மற்றொரு அனுபவமிக்க கிரிக்கெட் வீரரான சேதேஷ்வர் புஜாரா, வரவிருக்கும் ரஞ்சி டிராபி சீசனில் விளையாட தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் (SCA) மூத்த அதிகாரி ஒருவர், புஜாராவின் அனுபவம் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

புஜாரா ஒரு அக்மார்க் டெஸ்ட் போட்டிக்கான வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. புஜாரா இறுதியாக இந்திய அணிக்காக கடந்த ஜூன் 2023-ல் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார். இந்த ரஞ்சி டிராபி தொடரில் தன் திறமையினை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரஞ்சி டிராபி சீசன் அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. சௌராஷ்டிரா அணி தனது முதல் போட்டியில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது.