விளையாட்டு

INDvsSA: குயின்டன் டி காக் சதம்; இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயம்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

INDvsSA: குயின்டன் டி காக் சதம்; இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயம்!
IND vs SA
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிசம்பர் 6) விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 271 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக் சதம் விளாசி அசத்தினார். அவர் 89 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் டெம்பா பவுமா 48 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 29 ரன்களும், மேத்யூ ப்ரீட்ஸ்க் 24 ரன்களும் எடுத்தனர்.

இந்தியாவின் அபார பந்துவீச்சு

இந்திய அணி தரப்பில், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் மிகச் சிறப்பாகப் பந்து வீசித் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். தற்போது, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது.