தற்போது இதுப்போன்ற கேட்சுகளுக்கு ஒரு செக்மேட் வைத்துள்ளது கிரிக்கெட் ரூல்ஸ்களை வரையறுக்கும் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (MCC- Marylebone Cricket Club). பவுண்டரி லைன்களில் இதுப்போன்ற கேட்சுகளை பிடிப்பது பீல்டர்களின் புத்திக்கூர்மை என கிரிக்கெட் வர்ணனையாளர்களால் வர்ணிக்கப்படும் நிலையில், "பன்னி ஹாப்" (bunny hop) கேட்ச்கள் இனி சட்டவிரோதமாகக் கருதப்படும். அதாவது அதற்கு அவுட் வழங்கப்படாது.
இந்த விதி குறித்து கொஞ்சம் தெளிவாக பார்க்கலாம். முதலில், இந்த விதி கொண்டுவர முக்கிய காரணம் பிக் பாஷ் லீக்கில் நடைப்பெற்ற ஒரு போட்டி தான்.
The MCC has changed the law to make catches like this 'bunny hop' one from Michael Neser illegal. In short:
— 7Cricket (@7Cricket) June 14, 2025
If the fielder's first touch takes them outside the boundary, their *second* touch must take them back inside the field of play.
Basically, you're no longer allowed to… pic.twitter.com/1jaqAev0hy
கடந்த 2023 ஆம் ஆண்டு பிக் பாஷ் லீக்கில் (BBL) மைக்கேல் நெசர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் ஒன்றினை பிடித்தார். பவுண்டரி எல்லைக்கு வெளியே பந்தை அந்தரத்தில் தட்டிவிட்டு, பின்னர் எல்லைக்குள் வந்து கேட்சைப் பிடித்தார். அப்போதைய விதிப்படி இது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும், பலரும் இது "நியாயமற்றது" என்று கருத்து தெரிவித்தனர். இரண்டு முறை பவுண்டரி லைனுக்கு வெளியே குதித்து பந்தை தட்டி தட்டி கேட்ச் பிடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் விதிகள் குறித்து விவாதங்கள் கிளம்பியது.
புதிய விதி என்ன சொல்கிறது?
MCC வெளியிட்டுள்ள புதிய விதியின்படி (சட்டம் 19.5.2), ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் பந்தை ஒருமுறை மட்டுமே தொட அனுமதிக்கப்படுவார். அந்தரத்தில் பந்தை தொட்ட பிறகு, அவர் பவுண்டரி எல்லைக்குள் முழுமையாகத் தரையிறங்க வேண்டும். ஒருவேளை, பீல்டர் மீண்டும் அந்தரத்தில் பந்தை தொட்டால் அல்லது பவுண்டரி லைனுக்கு வெளியே தரையிறங்கினால், அது சிக்ஸராகக் கருதப்படும். இது ரிலே கேட்ச்களுக்கும் பொருந்தும். அதாவது ஒரு பீல்டர் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்து தனது அணியின் மற்றொரு வீரருக்கு தூக்கி எறிந்தாலும், அவர் மீண்டும் பவுண்டரி லைனுக்குள் தரையிறங்க வேண்டும். மாறாக அவர் மீண்டும், எல்லைக் கோட்டிற்கு வெளியே குதித்தால் அது சிக்ஸர் தான்.

எப்போது அமலுக்கு வருகிறது?
இந்த புதிய விதி ICC-யின் விளையாட்டு தொடர்களில் ஜூன் 17, 2025 முதல் (புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடக்க போட்டி) அமலுக்கு வரும். MCC-யின் அதிகாரப்பூர்வ விதிகளில் இந்த மாற்றம் அக்டோபர் 2026 முதல் முழுமையாகச் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.