விளையாட்டு

1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. பைனலுக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!

நடைப்பெற்று வரும் உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆஸ்திரேலியா அணியினை 1 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.

1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. பைனலுக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!
South Africa Clinches Last-Ball Thriller to Face Pakistan in Final
ஜூலை 18 ஆம் தேதி தொடங்கிய உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அந்த வகையில், லீக் சுற்று முடிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி:

நேற்றையத் தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரையிறுதிப் போட்டி நடைப்பெற இருந்தது. பஹல்காமில் நடந்த சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் இருந்த விரிசல் மேலும் அதிகரித்தது.

பஹல்காம் தாக்குதலை மேற்கொள் காட்டி, உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாட மறுத்துவிட்டது. இதனால், இரு அணிகளுக்கிடையேயான அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும், பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி:

மற்றொரு அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி பேட்டிங்கினை தேர்வு செய்தது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் 6 ரன்களில் ரவுட்டாகி ஏமாற்றம் தந்தனர்.

இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஸ்மூட்ஸ் நிதானமாக ரன்களை குவிக்கத் தொடங்கினார். இவருக்கு துணையாக விக்கெட் கீப்பர் வேன் வீக் அதிரடியாக விளையாட இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 111 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மூட்ஸ் 57 ரன்களிலும், வேன் வீக் 76 ரன்களிலும் அவுட்டாகினர்.

இதன்பின் களமிறங்கிய வீரர்கள், யாரும் பெரிதாக ரன்களை குவிக்காத நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி. ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சிட்டில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலியாவிற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஷான் மார்ஷ் 25 ரன்கள், கிரிஷ் லியன் 35 ரன்கள், ஷார்ட் 33 ரன்கள், எடுத்த நிலையில் அவுட்டாகினர்.

கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 14 ரன்கள்:

போட்டி இறுதி பந்து வரை, யார் வெற்றி பெறுவார்? என்கிற எதிர்ப்பார்ப்புடன் தான் சென்றது. இறுதி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் பர்னல் அபாரமாக பந்து வீசினார். தென்னாப்பிரிக்கா அணியின் பீல்டர்களும் கடைசி ஓவரில் மிக சிறப்பாக செயல்பட்டனர்.

கடைசி பந்தில் போட்டியினை டிரா செய்யும் நோக்கில் கிறிஷ்டியன் - கவுண்டர் நெய்ல் இணை ரன்கள் எடுக்க ஓடியது. டிவில்லியர்ஸின் அட்டகாசமான த்ரோவினால் கவுண்டர் நெய்ல் ரன் அவுட்டாக 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி.

நாளை (ஆகஸ்ட் 2 ஆம் தேதி) நடைப்பெற உள்ள இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பாகிஸ்தானை எதிர்க்கொள்கிறது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி.