விளையாட்டு

மீண்டும் வைரலாகும் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.. என்ன காரணம்?

விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து IAS அதிகாரி ஜித்தின் யாதவ் பதிவிட்ட பதிவு இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த பதிவில் "மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் வைரலாகும் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.. என்ன காரணம்?
Kohli CBSE 10th grade mark sheet goes viral again
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான விராட் கோலி கடந்த மே 12 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கெனவே டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், விராட் கோலியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சிபிஎஸ்இ ரிசல்ட்- வைரலான விராட் கோலி:

இந்நிலையில், கடந்த மே 13 ஆம் தேதி சிபிஎஸ்இ வாரியம் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தான், விராட் கோலி 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விவரங்கள் இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியது.

விராட் கோலி 2004 ஆம் ஆண்டு டெல்லியின் A-2 பஸ்சிம் விஹாரில் அமைந்துள்ள சேவியர் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் தனது 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவரது மதிப்பெண் சான்றிதழ் படி, விராட் கோலி ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களையும், கணிதத்தில் மிகக் குறைந்த மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.

ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள், சமூக அறிவியலில் 81 மதிப்பெண்கள், இந்தியில் 75 மதிப்பெண்கள், அறிமுக தகவல் தொழில்நுட்பத்தில் 74 மதிப்பெண்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 55 மதிப்பெண்கள் மற்றும் கணிதத்தில் 51 மதிப்பெண்கள் பெற்றார். தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவில் 74 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக, 69.83% மதிப்பெண்களை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண் பட்டியல் முதன்முதலாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜித்தின் யாதவ் என்கிற ஐஏஎஸ் அதிகாரியால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது.


விராட் கோலியின் மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்து தனது பதிவில், “கல்வி மதிப்பெண்கள் மட்டுமே வெற்றிக்கான ஒரே பாதை அல்ல. மதிப்பெண்கள் மட்டுமே காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் (விராட் கோலி) பின்னால் அணிதிரண்டிருக்காது. ஆர்வமும் அர்ப்பணிப்பும் தான் முக்கியம்” என்று ஜித்தின் யாதவ் ஐஏஎஸ் குறிப்பிட்டு இருந்தார்.