விளையாட்டு

எனக்கான நேரம் வந்துவிட்டது..விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், விராட் கோலியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனக்கான நேரம் வந்துவிட்டது..விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
Virat Kohli announces retirement from test cricket
விராட் கோலி,123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் 9230 ரன்கள் எடுத்துள்ள நிலையில் தனது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். ஒரு சில தினங்களுக்கு முன்பு தான், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவினை அறிவித்தார். இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கான இந்திய அணி இன்னும் ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கபடும் நிலையில் விராட் கோலியின் இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் ஷர்மா ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மீண்டும் கேப்டன் பதவி கேட்பதாக சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பு விராட் கோலியிடமிருந்து வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அறிமுகமான கோஹ்லி, அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். அடிலெய்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தோனிக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக தலைமையேற்றார் விராட்கோலி. அவரது தலைமையில் பல வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தது இந்திய அணி. 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 40 வெற்றிகளை பெற்றுள்ளது.

விராட் கோலியின் சாதனை:

டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்கள் வரிசையில் கோலி 4 வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்கள் முறையே, கிரேம் ஸ்மித் (53 வெற்றிகள்), ரிக்கி பாண்டிங் (48 வெற்றிகள்) மற்றும் ஸ்டீவ் வாஹ் (41 வெற்றிகள்). அதைப்போல், அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் கோலி 30 டெஸ்ட் சதங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். முதல் 3 இடங்கள் முறையே, சச்சின் டெண்டுல்கர் (51 சதங்கள்), ராகுல் டிராவிட் (36), மற்றும் சுனில் கவாஸ்கர் (34). கோலி டெஸ்ட் போட்டிகளில் 7 இரட்டை சதங்களையும் அடித்துள்ளார்.

விராட் கோலியின் உருக்கமான பதிவு:

தனது ஓய்வு முடிவு குறித்து விராட் கோலி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விவரங்கள், “நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேக்கி ப்ளூ அணிந்து 14 வருடங்கள் ஆகிறது. இந்த டெஸ்ட் வடிவம் என் பயணத்தின் போக்கை மாற்றியமைத்த விதத்தினை நினைத்துக்கூட பார்க்கவில்லை. அது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, மேலும் என் வாழ்கைக்கு தேவையான சில பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

வெள்ளை நிறத்துடன் விளையாடிய தருணங்கள் தனிப்பட்ட முறையில் அலாதியானது.நான் இந்த வடிவமைப்பில் இருந்து விலகிச் செல்ல முடிவெடுத்த தருணம் எளிதானது அல்ல, ஆனால் அது சரியானதாக இருக்கும் என உணர்கிறேன். என்னிடம் இருந்த அனைத்தையும் நான் கொடுத்துவிட்டேன், நான் எதிர்பார்த்ததை விட அது எனக்கு திரும்பக் கொடுத்தது. விளையாட்டுக்காகவும், நான் களத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்காகவும் நன்றி நிறைந்த இதயத்துடன் நான் விலகிச் செல்கிறேன். எனது டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோலியின் ஓய்வு முடிவினைத் தொடர்ந்து, இந்திய ரசிகர்கள், முன்னாள்- இந்நாள் வீரர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.