விளையாட்டு

மகளிா் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை!

மகளிருக்கான 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

மகளிா் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை!
Womens World Cup - IND vs SL
13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப். 30), செவ்வாய்க்கிழமை குவாஹாட்டியில் கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

போட்டி நடக்கும் இடங்கள்

மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகின்றன. இந்தியாவில் நவி மும்பை, குவாஹாட்டி, விசாகப்பட்டினம், இந்தூர் என 4 நகரங்களிலும், பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் மட்டும் இலங்கையின் கொழும்பு நகரிலும் நடைபெறவுள்ளன.

இந்தியா ஏக்கம் தீர்க்குமா?

போட்டியை நடத்தும் இந்திய அணி, இதுவரை ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில்லை. ஆஸ்திரேலியா 7 முறையும், இங்கிலாந்து 4 முறையும், நியூஸிலாந்து ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. 47 வருடங்களாகக் கோப்பையை வெல்ல முடியாத ஏக்கத்துக்கு இம்முறை இந்திய அணி தீர்வு காண முயற்சிக்கும். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.123 கோடியாகும்.

இன்றைய தொடக்க ஆட்டம்

இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இலங்கையுடன் மோதுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஹர்லின் தியோல், தீப்தி சர்மா ஆகியோர் பலம் சேர்க்கக் கூடும்.

பந்துவீச்சில் அமன்ஜோத் கவுர், ரேணுகா சிங், கிரந்தி கவுடு, ராதா யாதவ், ஸ்னே ராணா ஆகியோர் இலங்கை அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.