தமிழ்நாடு

விசாரணையில் தொய்வு..ரிதன்யாவின் தந்தை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு

ரிதன்யா வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

விசாரணையில் தொய்வு..ரிதன்யாவின் தந்தை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு
Rithanya's father files petition at IG's office
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த ரிதன்யா என்ற இளம்பெண் திருமணமான 78 நாட்களில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தனது மகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விசாரணை அதிகாரியை மாற்றக் கோரி அவரது தந்தை அண்ணாதுரை மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மேலும், விசாரணை தாமதமாக நடப்பதாகவும், விரைந்து வழக்கை முடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, “ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை தொய்வு அடைந்து விட்டது. இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி இடம் நேரடியாக புகார் அளித்துள்ளோம். வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும் பிரேத பரிசோதனை ரிப்போர்ட், லேப் ரிப்போர்ட், ஆடியோ ரிப்போர்ட் உள்ளிட்டவை வந்த பிறகு அதற்குரிய விசாரணை நடத்தப்படும் என்று ஐஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 29-ம் தேதி ரிதன்யா ஆடியோ வெளியீட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு இருவரை மட்டும் டிஎஸ்பி கைது செய்துள்ளார். பின்னர் ஒருவரை கைது செய்து தனது சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளார். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இந்த வழக்கை வேறு அதிகாரி அல்லது சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டும். அதேபோல ரிதன்யாவிற்கு கொடுத்த நகை, பணம் உள்ளிட்ட சீர்வரிசைகளை  நீதிமன்றம் மூலமாக வழங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்ணை இழந்துவிட்டு வருத்தத்தில் உள்ளேன். 27 வருடம் காப்பாற்றின பெண்ணை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிப்பது, இழந்ததை விட மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது. உங்கள் வீட்டில் அக்கா,தங்கச்சிக்கு இதுபோல நடந்திருந்தால் சோசியல் மீடியாவில் தவறான பதிவுகளை வெளியிடுவீர்களா? என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.