இந்தியா

தனியார் பள்ளியில் போதைப்பொருள் தயாரிப்பு.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

தனியார் பள்ளியில் போதைப்பொருள் தயாரிப்பு.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
Drug production in a private school
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளி இயக்குநர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரகசிய வேதியியல் ஆய்வகம்

மெதா பள்ளி (Medha School) எனப்படும் அந்த தனியார் பள்ளியின் இயக்குநர் மலேலா ஜெய பிரகாஷ் கௌட், வகுப்பறைகள் மற்றும் தடை செய்யப்பட்ட சில பகுதிகளை ரகசியமாக மாற்றி, அங்கு போதைப்பொருளான அல்ப்ராசோலம் உற்பத்தி செய்து வந்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவான ஈகிள் (EAGLE) குழுவினர், அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, எட்டு ரியாக்டர்கள் மற்றும் ட்ரையர்கள் பொருத்தப்பட்ட ஒரு ரகசிய வேதியியல் ஆய்வகத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.

7 கிலோ போதைப்பொருட்கள் & ரூ.21 லட்சம் பறிமுதல்

ஜெய பிரகாஷ் கௌட், தனது கூட்டாளியான குருவரெட்டி என்பவரிடமிருந்து போதைப்பொருள் தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டு, அதனை மகபூப்நகரில் உள்ள கள் விற்பனை மையங்களுக்கு விற்று வந்துள்ளார். சுமார் ஆறு மாதங்களாக இந்தத் தயாரிப்பு மையம் செயல்பட்டு வந்ததாகவும், வாரத்தின் ஆறு நாட்கள் உற்பத்தி நடக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் வழக்கம்போல் பள்ளி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது தளத்தில் போதைப்பொருள் தயாரிப்பு மையம் ரகசியமாக இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சோதனையில் 7 கிலோவுக்கும் அதிகமான அல்ப்ராசோலம், ரூ 21 லட்சம் ரொக்கம் மற்றும் பெருமளவிலான மூலப்பொருட்கள், உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.