இந்தியா

பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போது பிரதமர் என்ன செய்கிறார்? கனிமொழி எம்பி கேள்வி

விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போது பிரதமர் என்ன செய்கிறார்? கனிமொழி எம்பி கேள்வி
Kanimozhi MP
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்த காரசார விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் குறித்து பேசிய திமுக எம்பி கனிமொழி மத்திய அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

தேச பக்தியில் தமிழர்கள் குறைந்தவர்கள் அல்ல

மக்களவையில் அவர் பேசியதாவது, “ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து குழு தலைவர்களாக வெளிநாடு செல்ல வாய்ப்பளித்தற்கு நன்றி. ஆனால் வெளிநாட்டிற்கு சென்று விளக்க வேண்டிய நிலை வராமல் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடந்தது. இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நின்றவர் தமிழக முதலமைச்சர். தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல, தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக் கொடுத்ததில்லை. நாங்கள் இந்த தேசத்தோடுதான் நிற்கிறோம்.

பஹல்காம் தாக்குதல்: பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா?

விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா? மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் இருந்து பணிவைக் கற்றுக் கொள்ளுங்கள்.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு என்ன உதவி செய்கிறது? ரா உளவுப் பிரிவும் (RAW) மற்றும் ஐபி (IB) உளவுப் பிரிவும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதச் செயல்பாடு குறித்து எச்சரித்தபோதும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? பஹல்காம் தாக்குதலை எப்படி தடுக்க தவறினீர்கள்? பயங்கரவாதத்தால் இறப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் வம்சமே பாதிக்கப்படுகிறது. மக்களை பாதுகாப்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது.

அதிபர் டிரம்ப் கருத்து: மறுக்காதது ஏன்?

இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று 26 முறை கூறிவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அவரின் கருத்தை நேரடியாக மறுக்காதது ஏன்? இதுதான் உங்களது வெளியுறவுக் கொள்கையா? பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அந்நிய நாட்டுத்தலைவர் மத்தியஸ்தம் செய்தது ஏன்?

தமிழன் கங்கையை வெல்வான்

திடீரென பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் சோழர்கள், தமிழர்கள் மீது பாசம் ஏற்படுகிறது. கங்கைகொண்ட சோழன், கங்கையை வென்றவன். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தமிழன் கங்கையை வெல்வான். ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழர்களின் பெருமை, கலாசாரத்தை கண்டறிந்துவிடுகிறது பாஜக. ஆனால் கீழடி நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது” என அவர் தெரிவித்தார்.