விளையாட்டு

Shamar Joseph: ஆஸி., டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்த கருப்பு தங்கம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது. காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Shamar Joseph: ஆஸி., டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்த கருப்பு தங்கம்!
Barbados Test: SHAMAR JOSEPH HAS DOMINATED AUSTRALIAN TOP ORDER
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் மீண்டும் ஒருமுறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்றையத் தினம் பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது.

டாப் ஆர்டர் சொதப்பல்:

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை. 25 வயதான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் போட்டி தொடங்கியது முதலே தனது துல்லியமான பந்துவீச்சுகளால் ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான சாம் கான்ஸ்டாஸ் (3 ரன்கள்), கேமரூன் கிரீன் (3 ரன்கள்) மற்றும் உஸ்மான் கவாஜா (47 ரன்கள்) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். மறுபுறம் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜெய்டன் சீல்ஸ் விக்கெட்களை வீழ்த்த ஒருக்கட்டத்தில் மொத்தமாக நிலைக்குலைந்து போனது ஆஸ்திரேலியா அணி.

தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 138 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டிராவிஸ் ஹெட் மற்றும் ஆஸி., கேப்டன் கம்மின்ஸ் முடிந்த வரை போராடி பார்த்தனர். ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களின் வேகத்திற்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 180 ரன்களுக்கு சுருண்டது.

சமீபத்தில் காயத்திலிருந்து மீண்டு வந்த ஷமர் ஜோசப் 16 ஓவர்கள் வீசி 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். மறுமுனையில் ஜேய்டன் சீல்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியில், ஜோசப்பின் சிறப்பான பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இது முதல் முறையல்ல..

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கருப்பு தங்கம் என வர்ணிக்கப்படும் ஷமர் ஜோசப், ஆஸ்திரேலியா வீரர்களை திணறடிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு காபாவில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்ற போது அதில் ஷமர் ஜோசப் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருந்தார். மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது காலம் அவர் விளையாடாமல் இருந்த நிலையில் மீண்டும் களத்திற்கு திரும்பி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அனுபவம் வாய்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே இல்லாத ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையில், ஷமர் ஜோசப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. 123 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கெதிராக மிகப்பெரிய ஸ்கோரினை எடுத்து முன்னிலை பெறுமா என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.