விளையாட்டு

WCL: விளையாட மறுத்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி!

WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WCL: விளையாட மறுத்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி!
India Refuses to Play Pakistan in WCL Semi-Final; Pakistan Through to Final
வியாழக்கிழமை (ஜூலை 31) பர்மிங்காமில் நடைபெறவிருந்த உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாட மறுத்ததால் பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஜூலை 18 ஆம் தேதி தொடங்கிய உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

பாகிஸ்தானுடன் விளையாட மறுப்பு:

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அந்த வகையில், லீக் சுற்று முடிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இன்றையத் தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரையிறுதிப் போட்டி நடைப்பெற இருந்தது. பஹல்காமில் நடந்த சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் இருந்த விரிசல் மேலும் அதிகரித்தது. பஹல்காம் தாக்குதலை மேற்கொள் காட்டி, உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாட மறுத்துவிட்டது. இதனால், அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும், பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த தொடரில் ஏற்கெனவே, லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட இந்திய அணி மறுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாட மாட்டோம் என தெரிவித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இன்று நடைப்பெறும் மற்றொரு அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணியும் பாகிஸ்தான் அணியினை வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைப்பெற உள்ள இறுதிப்போட்டியில் எதிர்க்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.



போட்டியிலிருந்து விலகிய ஸ்பான்சர்:

WCL- தொடரில் ஒரு ஸ்பான்சராக விளங்கிய EaseMyTrip விலகல் முடிவை எடுத்துள்ளது. இதுத்தொடர்பாக EaseMyTrip சார்பில் தெரிவிக்கையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) உடன் 5 ஆண்டு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம். EaseMyTrip பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட எந்த WCL போட்டியிலும் தொடர்புடையதாகவோ அல்லது பங்கேற்கவோ மாட்டாது” என தெரிவித்துள்ளது.

மேலும், "நாங்கள் பெருமையுடன் இந்திய சாம்பியன்களை தொடர்ந்து ஆதரிப்போம், எங்கள் அணியுடன் உறுதியாக நிற்கிறோம். இருப்பினும், கொள்கை அடிப்படையில், பாகிஸ்தானை உள்ளடக்கிய எந்த போட்டியையும் நாங்கள் ஆதரிக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ மாட்டோம். இந்த நிலைப்பாடு WCL நிர்வாகத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. EaseMyTrip, இந்திய அணியை ஆதரிக்கிறது, ஆனால் பாகிஸ்தான் பங்கேற்கும் எந்த போட்டியிலும் ஈடுபடாது" என்று Ease My Trip தெரிவித்துள்ளது.