ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பகமான நம்பர் 3 பேட்ஸ்மேனாக வலம் வந்தார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைப்பெற்ற பல்வேறு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத்தந்தார்.
கடந்த 2023 ஜூன் மாதம் ஓவலில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடியதுதான் அவரது கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி மாற்று வீரர்களைத் தேட தொடங்கியது. இந்த தருணத்தில் புஜாரா சௌராஷ்டிரா அணிக்காகவும், கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சஸ்ஸெக்ஸ் அணிக்காகவும் ரெட்-பால் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்தார்.
தற்போது விராட் கோலி, ரோகித் ஷர்மா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், பிசிசிஐ இளம் வீரர்களை கொண்ட டெஸ்ட் அணியினை உருவாக்க முடிவெடுத்துள்ளது. அதற்கு உதாரணம் தான், சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர். இந்திய அணியின் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்து அசத்தினர்.
Wearing the Indian jersey, singing the anthem, and trying my best each time I stepped on the field - it’s impossible to put into words what it truly meant. But as they say, all good things must come to an end, and with immense gratitude I have decided to retire from all forms of… pic.twitter.com/p8yOd5tFyT
— Cheteshwar Pujara (@cheteshwar1) August 24, 2025
இந்நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்த புஜாரா, தனது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். இதுத்தொடர்பாக தனது பதிவில், "இந்திய ஜெர்சியை அணிவது, தேசிய கீதத்தைப் பாடுவது, மற்றும் களத்தில் ஒவ்வொரு முறையும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது - இவை அனைத்தும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகள். ஆனால், எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதால், மிகுந்த நன்றியுடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் நான் ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துள்ளேன்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் புஜாரா.
புஜாரா தனது 19 டெஸ்ட் சதங்களில் முதல் சதத்தை, 2012 ஆகஸ்டில் ஹைதராபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக அடித்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார். ஒரு டெஸ்டின் ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்த மூன்று இந்தியர்களில் புஜாராவும் ஒருவர் - மற்ற இருவரும் எம்.எல். ஜெய்சிம்ஹா மற்றும் ரவி சாஸ்திரி.
ஆஸ்திரேலியாவில் இந்தியா தொடர்ச்சியாக தொடர்களை வென்றதற்கும் புஜாரா முக்கிய காரணமாக இருந்தார். 2018-19 தொடரில், அவர் அடிலெய்டு, மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் மூன்று சதங்கள் அடித்தார். இது ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் முதல் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது. ஒட்டுமொத்தமாக, புஜாரா 278 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 51.82 சராசரியுடன் 21,301 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 66 சதங்களும், மூன்று முச்சதங்களும் அடங்கும்.
ஓய்வு முடிவினை அறிவித்த புஜாராவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள்.