தமிழ்நாடு

கவின் ஆணவக் கொலை.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கவின் ஆணவக் கொலை.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!
CBCID has started the investigation
திருநெல்வேலி அருகே கடந்த 27 ஆம் தேதி நடந்த ஆணவப் படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கே.டி.சி. நகர் அருகே கவின் (26) என்ற இளைஞர், தான் காதலித்த இளம் பெண்ணின் சகோதரனால் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கவின் கொலை மற்றும் வழக்கு பின்னணி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுடன் பள்ளிப் பருவம் முதலே பழகி வந்துள்ளார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

சம்பவம் நடந்த அன்று, கவின் தனது தாயாருக்குச் சிகிச்சைக்காக சுபாஷினி பணிபுரியும் தனியார் சித்த மருத்துவ மையத்திற்கு வந்துள்ளார். கவின் வந்ததை அறிந்த சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், கவினிடம் பேச வேண்டும் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும், கவினை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது.

உறவினர்களின் போராட்டம் மற்றும் கைது நடவடிக்கை

கவினின் உறவினர்கள், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை மற்றும் தாயாரை கைது செய்தால் மட்டுமே கவின் உடலைப் பெறுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள கவினின் சொந்த ஊரில் போராட்டங்கள் வெடித்தன. அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

நேற்றைய தினம், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டது

இந்த வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவம் கருதி, தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, கொலை நடந்த கே.டி.சி. நகரில் உள்ள நிகழ்வு இடத்திலிருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவரோஜ் நியமிக்கப்பட்டு, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.