தமிழ்நாடு

பட்டியலின பெண் தற்கொலை.. காதலனை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டியலின பெண் ஒருவர், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பட்டியலின பெண் தற்கொலை.. காதலனை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல்!
Young girl commits suicide..
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டியலின பெண் ஒருவர், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காதலுக்கு எதிர்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அந்த இளம்பெண்ணுக்கும், கண்ணன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்கண்ணன் என்ற இளைஞருக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாகக் காதல் இருந்துள்ளது. இந்த உறவின் விளைவாக, அந்தப் பெண் கர்ப்பம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சஞ்சய்கண்ணனிடம் அந்தப் பெண் கூறியுள்ளார். ஆனால், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சஞ்சய்கண்ணனின் பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சஞ்சய்கண்ணன், தனது காதலியின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறியுள்ளனர்.

இளம் பெண் தற்கொலை

இதற்கிடையே, சஞ்சய்கண்ணனின் பெற்றோர்கள், தங்கள் உறவினரான கண்ணன்தாங்கல் ஊராட்சி தலைவரின் கணவர் விஸ்வநாதனிடம் பேசி, இருவரையும் பிரித்து சஞ்சயை மீட்டு வருமாறு கூறியுள்ளனர். அதன்படி, கோட்டூர் ஊராட்சி தலைவர் முருகையன் வீட்டுக்குச் சென்று, அந்த இளம் பெண்ணை அழைத்து சஞ்சய்கண்ணனுடன் சேர்த்து வைப்பதாகக் கூறி அவர்களை விஸ்வநாதனுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்பிறகு, தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணி மனமுடைந்த அந்த இளம் பெண், கடந்த 7-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்றியுள்ளனர். ஆனால், நேற்று யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண் மீண்டும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குடும்பத்தினர் போராட்டம்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள சஞ்சய்கண்ணனைக் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரண்டு நாட்களாகப் பிரேதப் பரிசோதனை செய்ய முடியாமல் உடல் மருத்துவமனையின் பிணவறையில் உள்ளது.